சென்னை: நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சுதந்திர தின முன்னேற்பாடாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரையாற்ற உள்ளார்.
இதனால், புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் சுமார் 9 ஆயிரம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையம், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேருரையாற்றும் நிகழ்வில், பலருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விருது, சிறப்பாக பணியாற்றி வரும் ஆறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.