தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஸ்கோஸ், செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாட்டில் விலக்கு: மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்! - CM Mk Stalin

செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் இந்திய தர நிர்ணய அமைப்பின் நடைமுறையால் இந்திய ஜவுளித் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிள்ளார்.

MK Stalin Piyush Goyal
MK Stalin Piyush Goyal

By

Published : Apr 29, 2023, 2:19 PM IST

சென்னை :இந்தியாவில் தயாரிக்கப்படாத, மூங்கில் மரத்தில் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, "விஸ்கோஸ் இழைகள் தொடர்பாக, ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்திட, ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதே போன்று, பாலியஸ்டர் இழைக்கான (Polyester staple fibre) தரக் கட்டுப்பாட்டு ஆணை (QCO) ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டு, 03.04.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பாலியஸ்டர் முழுமையாக நீட்டப்பட்ட நூல் (Fully Drawn Yarn), பாலியஸ்டர் பகுதி நீட்டப்பட்ட நூல் (Partially Oriented Yarn), தொழில் துறைக்கான பாலியஸ்டர் நூல் (Polyester Industrial Yarn), மற்றும் 100 சதவீத பாலியஸ்டர் ஸ்பன் கிரே மற்றும் வெள்ளை நூல் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் 03.07.2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, நாகரிக உடைமாற்றங்களுக்கான போக்குகள் (Fashion Cycles) திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த தரக் கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளித் தொழிலில் தற்போது நடந்து வரும் பணிகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தும்.

தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் காரணமாக, விஸ்கோஸ் மற்றும் பாலியஸ்டர் நூல்களில் தனித்துவமான பண்புகளைக் கொண்ட இழைகளின் கண்டுபிடிப்பு சாத்தியமாகி வரும் நிலையில், இத்தகைய இழைகளுக்கு பொதுவான தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் பொருந்தாது. மேலும், விஸ்கோஸ் இழையினைப் பொறுத்தவரையில், இதற்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தர அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றாலும், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால் ஏற்றுமதிச் சந்தையில் அதிக தேவையுள்ள (demand) மூங்கில் விஸ்கோஸ் இழைக்கென இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தர அளவீடுகள் எதுவும் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் மற்றும் பாலியஸ்டர் இழைகளுக்கான பல விண்ணப்பங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக நிலுவையாக உள்ளதையும், இந்த அமைப்பின் அலுவலர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மேற்படி விண்ணப்பதாரர்களின் உற்பத்தி ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என ஜவுளித்தொழில் துறையினர் முறையிட்டுள்ளனர்.

மேற்படி விநியோக நிறுவனங்கள் இந்திய தரநிர்ணய அமைப்பின் தர அளவீடுகளுக்கு முழுமையாக தகுதி பெற்றிருந்தாலும், இந்திய தர நிர்ணய அமைப்பின் ஆய்வு மற்றும் ஒப்புதலின் அடிப்படையிலேயே மேற்படி இழைகளின் இறக்குமதி நடைபெறும். இந்த சூழ்நிலையில், இத்தகைய இழைககளை இறக்குமதி செய்து வரும் பல ஜவுளித் துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள், கணிசமான வணிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

தேவையான, தரமான இழைகளை இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதம் காரணமாக, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தரமான இழைகளை உபயோகப்படுத்த இயலாமல், அதன் மூலம் நீண்ட காலத்திற்கு வணிகத்தை இழக்க நேரிடும். தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்படுத்துவதால் தரம் மேம்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, அதன்மூலம் "மேக் இன் இந்தியா" முன்னெடுப்புகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது மிகவும் பாராட்டக் கூடிய ஒன்றாக இருப்பினும், தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமல்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்கி ஜவுளித் தொழிலின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பொதுவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அலகுகள் ஜவுளித் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. உற்பத்தியாளர்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) சான்றிதழ் பெறுவதற்கு தரப்பரிசோதனை மையங்களை நிறுவுவது கட்டாயம் என்ற நிலையில், அதற்கான செலவினம் மிகவும் அதிகம் என்பதால் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்களுக்கு இது சாத்தியமானதாக இல்லை.

மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே மேற்படி தரக் கட்டுப்பாடு ஆணைகளை அமுல்படுத்திடவும், இந்தியாவில் தயாரிக்கப்படாத, மூங்கில் மரத்தில் தயாரிக்கப்படும் விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளித்திட ஏதுவாக, உரிய உத்தரவுகளை மத்திய ஜவுளித்துறை, ராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சகங்களுக்கு வழங்கிட வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :BYJU'S : பைஜூஸ் சிஇஓ வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு - வெளிநாட்டு முதலீட்டில் முறைகேடு புகார்!

ABOUT THE AUTHOR

...view details