சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவிற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு. அந்த நட்பு தேர்தலுக்காக மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நட்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு, அதுதான் முக்கியம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. இது என்றைக்கும் தொடரும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும்.
இந்த நாடாளுமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாக நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் 'இந்தியா' கூட்டணி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மத்திய அரசு அமைவதற்கு, அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.
இந்தியா என்ற கூட்டணி உருவாக தமிழ்நாட்டில் இருக்கும் திமுக கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு உள்ளது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி - எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார். அதிலும், தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக திமுகவைப் பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாகவும், ஊழலை ஒழித்தே தீருவேன் என்றும் பிரதமர் பேசுகிறார். ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? -உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு வெளியே வந்துவிட்டது. ஒன்றல்ல இரண்டல்ல 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.