கேள்வி 1: தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகட்டும் பெரும் பொருட்செலவு வைக்கக்கூடிய இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு இருக்கும் சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்:திராவிட மாடல் அரசின் சிறப்பான திட்டங்களாக நீங்கள் குறிப்பிடும் இந்தத் திட்டங்களின் வரிசையில் மகளிருக்கான விடியல் பயணம் திட்டமும் முக்கியமானது. இவை அனைத்துமே அன்றாடத் தேவைக்கானத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ள காரணத்தால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் எத்தகைய சவால்கள் இருந்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் பத்தாண்டுக்காலத்தில் உருவாக்கப்பட்ட கடன் சுமை நிதிப் பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றைச் சமாளித்து, தற்போதைய ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறை போன்ற சவால்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், இரண்டு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தமிழ்நாட்டை இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆகவே இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மக்கள்நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி 2: வடக்கில் வலதுசாரிகளின் பெரும்பலமாக இருக்கும் இந்துத்துவா அடிப்படையிலான ஒருங்கிணைப்பை உடைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறீர்களா? இதனை உடைத்து வாக்குகளைப் பெற இந்தியா கூட்டணியின் உத்தி என்ன?
பதில்:மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை எதுவும் இல்லை! ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி வாக்குகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மதித்தல், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது கவனம் குவித்தல் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து நிற்கிறோம்.
ஆகவே, பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிராக உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில் உள்ள வெற்றிவாய்ப்புகளுக்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்தி. அதில் வெற்றி பெற முடியும் என்பதை சமீபத்திய இடைத் தேர்தல்கள், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் போன்றவை காட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
கேள்வி 3: தி.மு.க. இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாகக் காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன. பிரதமராகும் லட்சியம் தி.மு.க. தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?
பதில்:தேசிய அரசியலில் தி.மு.க. ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையைக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது. வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காகப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் தி.மு.க.வின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் தலைவர் கலைஞர்.
நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக உரிமைக்குரலை முன்னெடுத்து, வட இந்திய அரசியல் தலைவர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் முதுகெலும்பாக இருந்தது தி.மு.கழகம். அதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இட ஒதுக்கீடு வழங்க வித்திட்டு, அணையா விளக்கான “சமூகநீதி”யை இந்தியா முழுமைக்கும் ஏற்றி வைத்தது.
தி.மு.க. இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற பாராட்டைப் பெறும் விதத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, இந்தியாவில் கூட்டணி அரசு தன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு உறுதுணையாக நின்று, ஒன்றியத்தில் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது கலைஞரின் தி.மு.கழகம்தான்.
இரண்டு முறை டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் தி.மு.க. முதன்மையாக இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன. தலைவர் கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்!
கேள்வி 4: ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வரும் மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் வைக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டங்களும் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி ஆதிக்க எதிர்ப்புக்காக அறியப்பட்ட தி.மு.க.வும் தமிழ்நாடும் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகின்றன?
பதில்:இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை இரண்டிலுமே தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்தியிலான அறிவிப்புகள், அழைப்பிதழ்களைக் கிழித்தெறிந்து எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
பா.ஜ.க. அரசின் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மறைமுகத் திட்டம், தமிழை மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் அவரவர் தாய்மொழிகளுக்கும் எந்தளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல.
எங்கள் மொழி மீது எந்தவொரு மொழியைத் திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பவர்கள். அந்த நிலை தொடரும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமையவிருக்கிற புதிய ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் உரிய உரிமையும் முக்கியத்துவமும் சமமாக வழங்கப்படும்.
கேள்வி 5: வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களை பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் விதம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது காலத்திற்கேற்ப டிஜிட்டல் ஊடகங்களைக் கையாளும் வியூகமா அல்லது அதிகார அத்துமீறலா? இது பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில்:'வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி' என்பது பா.ஜ.க.வின் பொய்ப் பரப்புரைகளுக்குப் பொதுமக்கள் வைத்துள்ள பெயர். டிஜிட்டல் ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் இவற்றில் ஊடுருவலையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவது பா.ஜ.க. அரசின் வழக்கமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் இத்தகையப் போக்குகள் நிலவுவதை வாஷிங்டன் போஸ்ட் வெளிப்படுத்தியுள்ளது.