தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைப்பற்றிய பொருள்களைக் கணக்கில் காட்டாத காவலர்கள்

சென்னை: திருவல்லிக்கேணி விடுதியில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்களைக் கணக்கில் காட்டாமல் மறைத்த ஆய்வாளர் உள்பட நான்கு காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

காவலர்கள்
காவலர்கள்

By

Published : Apr 4, 2021, 8:36 AM IST

சென்னை திருவல்லிக்கேணி தையூப் அலிகான் தெருவில் உள்ள லக்கி விடுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாகத் தங்கியிருப்பதாகக் காவல் ஆய்வாளர் மோகன்ராஜுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அங்கு, 800 கிராம் தங்கம், 64 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 32 வெளிநாட்டு சிகரெட்டுகள், 10 விலையுயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த குல்கர்னிபாஷா (35), ஷேக்அப்துல்லா (27), சைதாப்பேட்டையைச் சேர்ந்த புர்கானுதீன் (41), மர்சூத்அலிகான் (36), அப்துல்ஹக் (32) ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் வெளிநாட்டிலிருந்து பொருள்களை வாங்கி விற்பனைச் செய்பவர்கள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் பறிமுதல்செய்த 800 கிராம் தங்கம், 10 செல்போன், 32 சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றைக் கணக்கில் காட்டாமல் வெறும் 64 மதுபாட்டில்களை மட்டுமே காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், தலைமைக் காவலர் மணிமாறன் ஆகியோர் கணக்குக் காட்டி லட்சக் கணக்கில் பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டது, உயர் அலுவலர்களுக்குத் தெரியவந்தது.

மேலும் வெறும் மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்ததாகப் பொய்யான தகவலை உயர் அலுவலர்களுக்குத் தெரிவித்ததும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், தலைமைக் காவலர் மணிமாறன் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காவலர்களே பொய்யான நாடகமாடி, கையூட்டுப் பெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details