ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என்ற உத்தரவை எதிர்த்து ரயில்வே தலைமை அலுவலகம் எதிரில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும்,ரயில்வே துறையின் இந்த அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கனிமொழி உள்ளிட்டோர் ரயில்வே பொது மேலாளருக்கு மனு கொடுத்தனர்.
தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என்ற உத்தரவு கண்டனத்திற்குரியது - கனிமொழி - ஆர்ப்பாட்டம்
சென்னை : ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என்ற உத்தரவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தமிழ்நாட்டில் நடைபெறும் ரயில்வே குரூப் சி தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என ரயில்வே அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். மாநில மொழிகளை புறக்கணித்து இந்தியை திணிக்கக் கூடாது. தமிழ் மொழிக்கு நியாயம் வழங்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மனுக் கொடுத்துள்ளோம். பாட புத்தகங்களில் அம்பேத்கர் குறித்து தவறான கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.