தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் ஆழ்கடல் ஒலி சென்சாருக்கான பொருட்கள்; குறைந்த செலவில் உருவாக்க முயற்சி

ஆழ்கடல் ஒலி சென்சாருக்கான நுண்ணிய சாதனங்களுக்கு செயல்முறைத் தொழில்நுட்பத்தை குறைந்த செலவில் உருவாக்க, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 9, 2023, 4:58 PM IST

சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation - DRDO) விஞ்ஞானிகளுடன் இணைந்து, ஆழ்கடல் தகவல் தொடர்புக்கான அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் வகையில் உருவாக்கி வருகின்றனர்.


இத்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியதனால், சர்வதேச அளவில் அமைந்துள்ள வார்ப்பகங்களை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த செலவில், நம்நாட்டில் சாதனங்களைத் தயாரிக்க உதவுகிறது. வெளிநாடுகளில் உற்பத்திக்கான செலவு அதிகம் என்பதுடன் வார்ப்பகங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன.
குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் முதிர்வு அளவை மதிப்பீடு செய்ய, பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத் தயார்நிலையை (Technology Readiness Level - TRL) தேசிய தொழில்நுட்ப தினமான மே 11ஆம் தேதியை முன்னிட்டு அடைந்திருப்பது முக்கிய வளர்ச்சியாகும்.

விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உயர் செயல்திறன் கொண்ட மென்படலங்களை உருவாக்கவும், 'பீசோ மென்படலங்களை அதிநவீன கடற்படை சென்சார் மற்றும் ஆழ்கடலில் பயன்படுத்தப்படும் வகையில் சாதனங்களாக மாற்றவும் 'பீசோ எலெக்ட்ரிக் மெம்ஸ் தொழில்நுட்பம்' தேவைப்படுகிறது. இந்த பீசோ மென்படலங்கள் என்பது, பீசோ மெம்ஸ் சாதனங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். அத்துடன் ஒலியியல் மற்றும் அதிர்வு உணர்திறன் பயன்பாடுகளுக்கும் உதவுகின்றன.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களான அமிதவ தாஸ் குப்தா, பாபி ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் விஞ்ஞானி வரதராஜன், சென்னை ஐஐடியின் டிஆர்டிஓ இண்டஸ்ட்ரி அகாடமியா- ராமானுஜன் சென்டர் ஆஃப் எக்செலன்ஸ்ன் டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானியான நடராஜன் ஆகியோர், 'மென்படல சவ்வு அடிப்படையில் பீசோ மெம்ஸ் (நுண் மின் இயந்திர அமைப்புகள்) ஒலி சென்சாரை உருவாக்கும் நோக்கில், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அதிநவீன பீசோ மெம்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், இந்தியாவுக்குப் பாதுகாப்புத் திறன்களின் எல்லைகளை உந்தித் தள்ளவும், இந்நாடு முக்கியப் பயன்பாடுகளை யுக்திசார்ந்த முறையில் செயல்படுத்தவும் உதவுகிறது. இந்திய கடற்படைக்கான டிஆர்டிஓ-வின் அடுத்த தலைமுறை சோனார்(SONAR - Sound Navigation and Ranging) திட்டத்திற்கான தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு பீசோ மென்படலங்கள், மெம்ஸ் செயல்முறைத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வகங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சர்வதேச அளவில், பல பீசோ மெம்ஸ் வார்ப்பகங்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பான பயன்பாடுகளுக்கு பல்வேறு பீசோ மெம்ஸ் சாதனங்களை உருவாக்கி வருகின்றன.

பீசோ மென்படலம் அடிப்படையிலான பீசோஎலெக்ட்ரிக் சாதன சந்தை என்பது தற்போது 5 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 120 சதவீத அளவுக்கு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound Annual Growth Rate - GAGR) இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஆழ்கடல் பயன்பாடுகளுக்கான பீசோ மெம்ஸ் ஒலியியல் சாதனங்களின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப இடைவெளியை, பீசோ மெம்ஸ் தொழில்நுட்ப உள்நாட்டு வளர்ச்சி இணைக்கச் செய்கிறது. பெரிய பரிமாணம் கொண்ட (100 மிமீ விட்டம்) பீசோ எலெக்ட்ரிக் மென்படலம் RF sputtering, Sol-Gel ஆகிய இரண்டாலும் சீரான தன்மை, அதிக பீசோ எலெக்ட்ரிக் பண்புகளுடன் புனையப்பட்டுள்ளது.

பீசோ மெம்ஸ் செயல்முறையானது டிஆர்டிஓ குழுவுடன் இணைந்து, பீசோ மெல்லிய ஃபிலிமின் செயல்பாட்டை சிதைக்காமல், ஒலி சென்சாரை முழுமையாகப் புனைக்கும் பணி வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புனையப்பட்ட PZT மென்படலம் அடிப்படையிலான ஒலி சென்சார், வழக்கமான PVDF அடிப்படையிலான ஒலி சென்சாரை விட அதிக செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

இந்த அதிநவீன சென்சார் தொழில்நுட்பம், உயர்செயல்திறன் கொண்ட பீசோ மெம்ஸ் ஒலி சாதனங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. மேலும் பாதுகாப்புத் துறைக்கான பயன்பாடுகளுக்கும் இது சாதகமாக அமையும்.
இதையும் படிங்க: வைட்டமின் A & D செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details