திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நல குறைவால், மார்ச் 7 ஆம் தேதி காலமானார். இதனை தொடர்ந்து, தற்போது அடுத்த திமுக பொதுச்செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திமுக கட்சியை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவி மிகவும் பலம் பொருந்திய முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும்.
திமுக தொடங்கியபோது பேரறிஞர் அண்ணா, நாவலூர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்கள் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளனர். அதே போல், தற்போது மறைந்த பேராசிரியர் அன்பழகன் 42 வருடங்களாக பொதுச்செயலாளராக பதவியில் இருந்து மறைந்துள்ளார்.
பொதுச்செயலாளருக்கு கட்சி சார்ந்த அறிவிப்புகள் வெளியிடவும், நிர்வாகிகள் நியமிப்பது, நீக்குவது உள்ளிட்ட பல அதிகாரங்கள் கொடுக்கப்படும். திமுகவிற்கு தலைவர் என்று ஒருவர் இருந்தாலும், பொதுச்செயலாளர் பதவி அதற்கு ஈடாகவே கருதப்படுகிறது.
அதன்படி, தற்போது திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகின்றது.
முதன்மை செயலாளராக இருந்த டி.ஆர்.பாலுவிற்கு விடுப்பு அளித்து, சில தினங்களுக்கு முன்பு கே.என்.நேருவை முதன்மை செயலாளராக நியமித்தனர். நாடாளுமன்ற உறுப்பினராக டி.ஆர்.பாலு இருந்தாலும், கட்சி பொறுப்பில் அவரை அமர்த்த வேண்டும் என்ற குரல் திமுகவில் உள்ளது.
அடுத்த திமுக பொதுச்செயலாளர் யார்? திமுக துணை பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது. சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வருவதை தொடர்ந்து, தென்தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்த ஐ.பெரியசாமி உறுதுணையாக இருப்பார் என திமுக தலைவர் கணக்கு போடுவதாக, கட்சி வட்டாரங்கள் கருதுகின்றனர்.
அதே போல் துரைமுருகன் கட்சியின் மூத்த தலைவர், அண்ணா, கலைஞருக்கு நெருக்கமானவர் என்பதால் தற்போதைய பொருளாளர் துரைமுருகனுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று அறிவாலயம் வட்டாரங்கள் கூறுகின்றன.
க. அன்பழகன் மறைவை தொடர்ந்து, திமுக உட்கட்சி பொதுதேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின் விரைவில் திமுக பொதுக்குழு கூடி, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:இனமானப் பேராசிரியர் அன்பழகனின் புகைப்படத் தொகுப்பு