சென்னை நெற்குன்றம் பெருமாள் தெருவை சேர்ந்தவர் ஆலோன்(51). இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில் கணவன் - மனைவி வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். ஆலோன் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வரும் நிலையில், லட்சுமி வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 27 இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆலன், மனைவி லட்சுமியின் முகத்தில் அம்மி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து ஆலோன் நேராக கோயம்பேடு காவல் நிலையத்திற்குச் சென்று தனது மனைவி பாலியல் தொழில் செய்துவருவதாகவும், பலமுறை கண்டித்தும் விடாததால், கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தார்.
பின்னர் கொலை நடந்த இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் லட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூரய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆலோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த ஆலோன் மது போதைக்கு அடிமையானவர் என்றும், கடந்த 20 ஆண்டுகளாக மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததும், மூன்று நாள்களுக்கு முன்பாக கூட மனைவியோடு சண்டையிட்டதால், லட்சுமி தனது மகன் ஆனந்த் வீட்டில் தங்கியிருந்ததும், நேற்று மாலை மகன் வீட்டிற்குச் சென்று மனைவியைச் சமாதானம் செய்து அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்தது.