சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படுமா..? செங்கோட்டையன் பதில் - Govt staff children
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.28,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள மாணவர்கள் கல்வி நன்றாகக் கற்பதற்காக விரைவில் கல்வித் துறைக்கென தனி தொலைக்காட்சி முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று துவக்கப்பட உள்ளது.
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருடைய கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து ஒப்புதல் பெற்று முடிவெடுக்கப்படும்.
கடந்தாண்டு 2018-ல் 1,6,9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2 ,3, 4, 5 ,7, 8 ,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். மேலும், 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பதினைந்து நாட்களுக்குள் எழுதி முடிக்கப்படும் என தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆலோசனை தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற உத்தரவு முழுமையாகக் கிடைத்தபிறகு, அதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தை பொருத்தவரை, மதுரை ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்குள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பணிக்கு வருவதற்கு மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டி உள்ளது.
அதற்குக் காரணம் அவர்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மீண்டும் ஒரு போட்டி தேர்வு வைப்பது நல்லதாகவே கருதுகிறோம். இந்தத் தேர்வானது வரவேற்கத்தக்கதாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.