கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏறக்குறைய 120 நாள்களுக்கு மேலாக நீடிக்கும் ஊரடங்கால், சாலைகளில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த கால் டாக்சிகள் தற்போது தெருக்களின் ஓரத்தில் முடங்கியுள்ளன. கால் டாக்சியை போன்று அதனை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை என மாநிலத்தில் உள்ள பெருநகரங்களில் கால் டாக்சியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரிதும் சிரமமாக இருப்பதாக கூறும் டாக்சி ஓட்டுநர்கள், பழக்கமில்லாத மாற்று வேலையை தேடி செல்வதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து மதுரை ஓட்டுனர் சுப்பையா கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளாக ஓலா நிறுவனத்திற்காக கால் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கரோனா தொற்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக ஏறக்குறைய நான்கு மாதங்களாக எங்களுக்கு தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 500 வரை லாபம் பார்த்து வந்த எங்களுக்கு தற்போதைய சூழல் வறுமையின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது” என்கிறார்.