ஜூன் 24இல் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்! - மானிய கோரிக்கை
2019-06-21 12:06:22
மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. பொதுவாக 30 நாட்களுக்கு மிகாமல் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற வேண்டும். எனவே பல்வேறு மக்கள் பிரச்னைகள், துறை ரீதியான விவகாரங்கள் குறித்து விவாதிக்க 30 அலுவல் நாட்களாவது நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முடிவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் முடிவு செய்வார். இந்தக் கூட்டத் தொடரானது ஜூலை மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது.