முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், பல்வேறு முக்கிய அம்சங்களும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமான நிர்வாகம், ஊழல் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், உள்ளூர் வரிகள் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.
வரிகளை உயர்த்த வாய்ப்பு
மேலும், பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்டவை நட்டத்தில் இயங்குவதாகவும், ஒரு கிலோ மீட்டர் தூரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டால் 59 ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் வரிகள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ஆனால், பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்டவை உடனடியாக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு தான்.
திமுக அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பெரும்பாலும், அவற்றை தேர்தல் நெருங்கும் சமயத்தில் செயல்படுத்த தான் அதிக வாய்ப்புள்ளது.
கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி கிடைக்குமா?
தமிழ்நாடு நிதி நிலையை சீர்படுத்த திமுக என்ன மாற்றுத் திட்டத்தை கையில் வைத்துள்ளது என ஈடிவி பாரத் செய்திகள் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, " இந்த நிதியாண்டில் ஆறு மாதங்கள் தான் மீதமுள்ளது என்பதால் பெரும் அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பில்லை. அரசு வரி வருவாயை உயர்த்த கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம். பட்ஜெட் தாக்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால், பொருத்திருந்தால் திமுக அரசு என்ன திட்டங்களை கையில் வைத்திருக்கிறது என்பது தெரியவரும் என பதிலளித்தார்.