தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றி வைரஸை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இதற்கிடையே 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு தேர்வுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் வசதிக்காக தொற்று குறித்த நடவடிக்கைக்கு பின்பு அரை மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.