மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் புதிய கல்விக் கொள்கை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ''நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி இந்திய பள்ளிகளின் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்தும், மிகச் சிறந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “தேசிய கல்வி வரைவுக் கொள்கைக்கான குழு” ஜூன் 2017இல் அமைக்கப்பட்டது. இக்குழு மே 31 2019 அன்று தங்களது தேசிய வரைவுக் கொள்கையை அளித்தது. அதன்மீது ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்டன.
ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை, திறமையை வெளிக்கொணரும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது.
மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும், பள்ளிக் கல்விக்கு உலக அளவிலான அணுகுமுறையை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.