சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்காகவும், திமுகவை எதிர்க்கவும் 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையைத் தொடங்குகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கும் இந்த பாதயாத்திரையில் தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திக்க இருக்கிறார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை 'திமுக பைல்ஸ் 1' என்ற தலைப்பில் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். 11 பேர் கொண்ட பட்டியலில் ஒரு லட்சத்து 30,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இதனை அடுத்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட திமுகவினருடைய சொத்துப் பட்டியல் 'திமுக பைல்ஸ் 2' என்ற தலைப்பில் பாதயாத்திரைக்கு முன்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார். 'என் மண் என் மக்கள்' என்ற இணையதளத்தில் 'திமுக பைல்ஸ் 2' வெளியாகும் என பாஜக தெரிவித்துள்ளது.