தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையில் முதல் தவணையாக ரூ.29,000 வழங்குக" - அண்ணாமலை வலியுறுத்தல்

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத கால நிலுவைத்தொகையுடன் சேர்த்து 29,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

TN BJP
TN BJP

By

Published : Mar 20, 2023, 3:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

உரிமைத் தொகை அறிவிப்பு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழ்நாட்டில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details