சென்னை:தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. விஷச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரு மாவட்டங்களிலும் காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஷச்சாராய இறப்புகளை கண்டித்து நேற்று(மே.20) பாஜக மகளிர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று(மே.21) சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, "தமிழக ஆளுநரிடம் இரண்டு விஷயங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 நபர்கள் உயிர் இழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது எப்படி பாலாறு தேனாறு போல ஓடுகிறது? என்பது குறித்து தெளிவாக தெரிவித்து உள்ளோம். வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறாமல், டாஸ்மாக் கடைகளை குறைத்து எப்படி அதே வருமானத்தை அரசு ஈட்ட முடியும் என்கின்ற வெள்ளை அறிக்கையை 15 நாட்களில் பாஜக தாக்கல் செய்யும் என்றும் ஆளுநரிடம் கூறியுள்ளோம்.
அதேபோல அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழலில் ஈடுபட்டார் என்ற வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு மாதங்களில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றால் சிறப்புக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில் அமைச்சர் பதவி பிரமாணம் செய்தபோது கூறிய வார்த்தைகளை செந்தில் பாலாஜி மீறியுள்ளதால், அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதலமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். அமைச்சரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய அல்லது விசாரணை முடியும் வரை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கூற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி பதவியில் இருந்தால், ஒரு அமைச்சரை எப்படி நேர்மையாக விசாரணை செய்வார்கள்?.
அதேபோல தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளுக் கடைகளை திறக்க தமிழக பாஜக வலியுறுத்துகிறது. கள்ளுக்கடைக்கு ஆதரவாக தமிழக பாஜக நிற்கும். கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஆளுநராக நான் இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருப்பேன்" - அண்ணாமலை!