நேற்றைய சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எம்எல்ஏ செம்மலை, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இடையே நடந்த உரையாடல்.
செம்மலை: குடியுரிமை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரையோடு திமுகவினர் பேசுகிறீர்கள். 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். 2010ஆம் ஆண்டில் உங்கள் ஆட்சியில் அவரது தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். ஆனால் அவரை இலங்கைக்கே திருப்பி அனுப்பினீர்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குட்டிமணி, ஜெகன் ஆகியோர் இங்கு அடைக்கலம் தேடி வந்தபோது அவர்களைக் கைது செய்தீர்கள். இவ்வளவும் செய்துவிட்டு இன்று அவர்கள் மேல் அக்கரை கொண்டதுபோல நாடகம் ஆடுகிறீர்களே? ஏன் இரட்டை நிலை எடுக்கிறீர்கள்?
துரைமுருகன்: இந்த அற்புதமான பேச்சுக்கு செம்மலையை நான் பாராட்டவில்லை. ஆனால் செம்மலையையே அப்படிப் பேச வைத்த முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நீங்கள் சிண்டு முடியாதீர்கள். அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.
துரைமுருகன் பதில்: ஏதோ இலங்கை பிரச்னையில் ஆரம்பத்திலிருந்தே அதிமுக ஒரே சீரான நிலையில் இருந்ததுபோல செம்மலை பேசுகிறார். பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கேட்டது ஜெயலலிதாதானே. போர் என்றால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியதும் அவர்தானே.
செம்மலை: பிரபாகரனை முதலில் ஆதரித்தது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாதான். பிரபாகரன் நல்ல பாதையில் போகும்போது ஆதரித்தோம். வழி தவறிச் சென்றபோது உதவுவதை நிறுத்திவிட்டோம். 2003ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சிஏஏ என்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 14(ஏ) பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. 16 ஆண்டுகள் ஆகியும் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லையே. முதலில் சட்டத்தை சரிவர தெரிந்துகொண்டு பேசுங்கள்.