சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி,பா.வேல்துரை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்ட்டது.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தனித்தீர்மானம், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முன்மொழிந்தார். மேலும், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது, சட்டவிரோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய அரசுடன் இருக்கும் இணக்கமான உறவைப் பயன்படுத்தி திட்டங்களை சீராக்க ஆளுநர் முயற்சிக்கலாம் எனக் கூறிய முதலமைச்சர், ஆனால் அவர் அதனை செய்வதில்லை என குற்றம் சாட்டினார். மேலும், ஆளுநர் பதவி என்பது அகற்ற வேண்டிய பதவியாக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை மக்களாட்சிக்கு அடங்கி இருக்க வேண்டியது மரபு ஆகும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினகள் கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது, முதலமைச்சரின் தனித் தீர்மானத்தைக் கண்டிப்பதாக தெரிவித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதனையடுத்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.