சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், காலவரையறையின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரிய ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு அம்மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்நிலையில், இன்று (நவ.18) தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில், சில மசோதாக்களை பேரவையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலில் மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான என்.சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.