நெல்லையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலி:ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்க, முதலமைச்சர் மேல்முறையீடு செய்யலாமா அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்வார் என்று, நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து விண்ணப்பம் மறுக்கப்பட்ட பெண்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னையில் நேற்று (நவ.10) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 12 ஆயிரத்து 135 பயனாளிகளுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நிகழ்ச்சியில் பேசுகையில், "மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பயனாளிகளை இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதலமைச்சர் தகுதியான நபர்களை தேர்வு செய்துள்ளார்.
1000 ரூபாய் கிடைக்காமல் மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மகளிர், ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்" என தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இந்த தீர்மானத்தை ஆளுநர் நீண்ட காலமாக கிடப்பிலேயே வைத்திருந்தார்.
மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை சட்டமாக்கினோம். இந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சரவை கூடி, முதலமைச்சர் இதுகுறித்து மேல் முறையீடு செய்யலாமா அல்லது இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்வார். மக்களை பாதிக்கும் எதுவாக இருந்தாலும் அதனை தடுக்க முயற்சிப்போம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் அவரது இருக்கையை மாற்றப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,"கட்சி விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசமுடியாது. நீதிமன்றம் சட்டமன்றத்தை கட்டுப்படுத்தக்கூடியதல்ல. பேரவை விதி, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு சட்டமன்றம் கட்டுப்பட்டு நடக்கும். நீதிமன்ற ஆணைகள் பெற்றுவந்தால் அதனை சட்டமன்றம் பரிசீலிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. விழுப்புரத்தில் 22 ஆயிரம் புதிய பயனாளர்களுக்கு ரூ.1000 வழங்கிய அமைச்சர் பொன்முடி!