சென்னை:சட்டப்பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-ஐ, மறுஆய்வு செய்திடக் கோரும் மசோதாவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என கூறினார். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும் என கூறினார்.
இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மசோதா குறித்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினார்.
விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், சூதாட்டம் தடை சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று பல்வேறு முறை அமைச்சர்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆன்லைன் ரம்மியினால் பலியாகி உள்ளன என கவலை தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காக... இது சட்டத்தின் மூலமாக ஏற்றப்படவில்லை என் இதயத்தின் மூலமாக ஏற்றப்பட்டது என்று முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என வேல்முருகன் கூறினார்.
விவாதத்தில் பங்கெடுத்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆன்லைன் மட்டுமல்லாமல் அனைத்து வகையான சூதாட்டங்களையும் தடை செய்ய பாஜக முழு ஆதரவை தெரிவிக்கிறது என்றார். ஆன்லைன் விளையாட்டுகளால் மட்டுமல்ல மது போதை, ரம்மியால் கூட பலர் உயிரிழக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசின் சட்டத்துடன் முரண்பாடு இருக்க கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.