கபாலீஸ்வரர் கோயில், காரணீஸ்வரர் கோயில் என பிரசித்தி பெற்ற ஏழு சிவாலயங்களுடைய மயிலாப்பூர் தொகுதி, கிறிஸ்தவர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமான சாந்தோம் தேவாலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது மட்டுமின்றி சென்னைக்கு விஜயம் செய்யும் அனைவரும் விரும்பி செல்லும் கலங்கரை விளக்கமும், உலகத்திலேயே நீளமான இரண்டாவது கடற்கரையான மெரீனாவும் இத்தொகுதியின் தனித்த அடையாளங்கள். கடற்கரையின் அரணாக மீனவர்கள் விளங்குகிறார்கள்.
சங்கீதசபாக்கள் மிகுந்து காணப்படும் இப்பகுதி சென்னைக்கு இசைநகரம் என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. வாளிப்பான கடலையும், வாஞ்சையான மனிதர்களையும் உடைய இத்தொகுதி முன்னொரு காலத்தில் திமுகவின் ஆஸ்தான தொகுதியாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று முறை தொடர்ந்து வென்ற அதிமுக, வரலாற்றைத் திருத்தி எழுதியது.
வாக்காளர்கள் விவரம்
மொத்த வாக்காளர்கள் - 2,69,400 பேர்
பெண்கள் - 1,38,739
ஆண்டுகள் - 1,30,621
மாற்றுபாலினத்தவர்கள்- 40 பேர்
மயிலாப்பூர் தொகுதியில் அனைத்து மதத்தவர்களும் இருந்தாலும், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக மீனவர்கள் விளங்குகின்றனர். சென்னை மாகாணமாக இருந்தபோது 1952 முதல் 1967 வரை 4 தேர்தல்களும், அதற்கு பின்னர் 10 தேர்தல்களையும் இத்தொகுதி கண்டுள்ளது. 1952 முதல் இதுவரைலும் மொத்தம் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாஜக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய வேட்பாளர்கள் விவரம்
த. வேலு - திமுக
ஆர். நடராஜன் - அதிமுக
ஶ்ரீப்ரியா - மநீம
கி.மகாலட்சுமி - நாதக
டி.கார்த்திக் - அமமுக
தொகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு
மயிலாப்பூரில் மீனவ சமுதாய மக்கள் அதிகம் வாழும் பகுதி நொச்சிக்குப்பம். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமில்லாது கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து தான் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அயல்நாட்டு வர்த்தகத்தில் மின்னும் இத்தொகுதிக்கு, லூப் சாலையில் நிரந்தர மீன் மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மீனவர்கள். சுகாதார பிரச்னைகளில்லாத தொகுதியாக மயிலாப்பூர் மாற, குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் தொகுதிவாசிகள், அரசு கொடுத்த குடியிருப்புகளை மறுசீரமைக்க வலியுறுத்துகின்றனர்.
பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை அகற்றினால் நலம் என்கிறார்கள், பெரியவர்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் இருக்கும் சாலை பிரச்சனைக்கு மயிலாப்பூர் தொகுதியும் விதிவிலக்கில்லை. சேதமாகி கிடக்கும் தெருக்களின் சாலைகளை மயிலை சட்டப்பேரவை உறுப்பினர் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதி: யாருக்கு வெற்றி வாய்ப்பு? நிறைவேறாத கோரிக்கைகளை அடுக்கினாலும், தற்போது ஆளும் அரசின் செயல்பாட்டால் நிவர் புயலின்போது தண்ணீர் தேக்கம் இல்லாமல் பாதுகாப்பாக இருந்ததாக, அரசுக்கு அப்பகுதியினர் சான்றளிக்கின்றனர். தொகுதிவாசிகள் நிறையையும், குறையும் ஒருசேர தெரிவிக்கும் நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:திருப்பத்தூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!