சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட தொழிற்பாடப்பிரிவுகள் இருந்தது. அதில் முக்கியமாக, வேளாண் அறிவியல் பாடப்பிரிவிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடம் கற்றுத் தரப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்பொழுது வேளாண் அறிவியல் பாடத்தினை எடுப்பதற்கு போதுமான ஆசிரியர்களை பணியில் அமர்த்தாமல் உள்ளனர். இதனால் வரும் காலங்களில் மாணவர்கள் வேளாண் அறிவியல் சார்ந்த உயர்கல்வியினை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாடு வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.மாதவன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்பொழுது 50 க்கும் மேற்பட்டப் பள்ளிகளில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது.
2018 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்தப் பணியிடங்கள் தற்போதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு வேளாண் அறிவியல் பாடத்தினை கற்பிக்க வேண்டும்.
வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியைத் தனி பாடமாக அறிமுகம் செய்வதால் மாணவர்கள் செயல்முறை கற்றலை வாழ்க்கையில் செயல்படுத்தி அவர்களும், சமுதாயமும் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். பொதுக் கல்வி திட்டத்தில் கற்பிக்கப்படும் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களை படிப்பதுடன் வாழ்வில் செயல்படுத்துவதில் மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், இயற்கை மற்றும் வாழ்வியலுடன் தொடர்புடைய வேளாண் அறிவியல் பாடத்தை பொது கல்வி திட்ட பாடப்பிரிவில் ஒரு பாடமாக இணைத்து உருவாக்கிட வேண்டும்.