சென்னை: தமிழ்நாடு அரசின் 15ஆவது சட்டப்பேரவையின் இறுதி கூட்டம் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டது. இறுதி கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே போல விவசாயிகளுக்கான நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைப் பொது தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள், மே 2ஆம் தேதி வெளியாகின. அதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, திமுக தனிப்பெரும்பான்மையுடன் மே 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், மரபுப்படி ஆளுநர் உரையுடன் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 10 மணிக்கு தனது உரையை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் படிப்பார். அந்த உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு படித்து முடிப்பார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு, கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.
அதன்படி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவார்.
திமுகவின் முதல் கூட்டம்
திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பெற்ற பின்பு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிவிப்புகளில் உள்ள வாக்குறுதிகளில் முக்கியமானவை சில அறிவிப்புகளாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டில் 'நீட்' உள்பட எந்தவித பொது நுழைவுத் தேர்வு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்யத் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும், தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராக இயற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டுமென ஆளுநர் தனது உரையில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.