தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டிலேயே 3ஆவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் உள்ளது - அமைச்சர் தா.மோ. அன்பரசன் - சென்னை செய்திகள்

தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே 3வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
நாட்டிலேயே 3வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

By

Published : Mar 11, 2023, 9:50 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் FaMe TN மற்றும் RXIL குளோபல் லிட் இணைந்து நடத்தும் பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தின் பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு மற்றும் குழு கலந்தாய்வு நிகழ்ச்சி, இன்று (மார்ச் 11) கிண்டி சிட்கோ தலைமை இடத்தில் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நாட்டில் ஏறக்குறைய 6 கோடியே 30 லட்சம் எம்எஸ்எம்இ (MSME) நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதன் மூலம், 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் 3இல் 1 பகுதியும், மொத்த ஏற்றுமதியில் 45 சதவீத பங்கையும் வகிக்கின்றது. இதில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தமட்டில், தமிழ்நாடு 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்து, இந்தியாவிலேயே 3ஆவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாகக் கொண்டு வர ‘தமிழ்நாடு ஏற்றுமதி திட்டம் - 2021’ஐ வெளியிட்டார்.

அதனை நிறைவேற்றும் விதமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், எம்எஸ்எம்இ துறையின் மூலம் ஏற்றுமதி மண்டலங்கள், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க கோயம்புத்தூர், திருச்சி, ஒசூர் மற்றும் மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க 16 கோடியே 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ நிறுவனங்கள் ஏற்றுமதி குறித்து அறிந்த முதலமைச்சரால் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு’ வெளியிப்பட்டது. ஏற்றுமதி குறித்து மாவட்டத் தொழில் மைய உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முதல் கட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு மூலம் பயிற்சிகளும், 2ஆம் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் மூலமும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இன்று காலை முதல் இந்த இரண்டு பயிற்சிகளையும் இணைத்து, ஒரு குறுகிய கால பயிற்சியும் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கவும், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட FAMe TN-க்கான அலுவலகம் இன்று இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டத் தொழில் மையங்களிலும் எற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மாவட்ட ஏற்றுமதி மையங்களில், இப்பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த மையங்களில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் குறித்த தகவல்கள் பராமரிக்கப்படும்.

எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றவும், ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய, மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும். எம்எஸ்எம்இ நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உரிய தொகையைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண 4 மண்டலங்களில் வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த மன்றங்கள் மூலம் 430 நிறுவனங்களுக்கு 84 கோடியே 62 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நடைமுறை மூலதன சிக்கலை தீர்ப்பதற்காக, தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் (Tamil Nadu - TReDS) என்னும் புதுமையானத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 155 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைப் பட்டியல்களுக்கு விற்பனைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இத்தளத்தில் இணைந்துள்ள 14 வங்கிகள் தங்களுடைய கடன் இலக்கை 2 ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

இதேபோன்று, தமிழ்நாடு எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கானத் தொகையினை குறித்த காலத்தில் பெறுவதற்கு ஏதுவாக, பன்னாட்டு நிதி சேவைகள் மைய அதிகார ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளம் குறித்த விழிப்புணர்வும், ஆலோசனைகளும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தினை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, பன்னாட்டு வர்த்தக நிதி சேவைத் தளம் குறித்த விழிப்புணர்வையும், அதனை பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளையும் அறிந்து பயன் பெற வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு (FIEO), வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து வழங்கப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்ட தொழில் மையத்தின் களப்பணி அலுவலர்கள் பயன்படுத்தும் விதமாக, 10 புதிய இரு சக்கர வாகனங்களையும் அமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து FaMe TNஇன் விரிவாக்கப்பட்ட புதிய அலுவலகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details