இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் சிலைக்கு, கடலூர் காவல் நிலையக் காவலர்களான ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களைக் காட்டி மூவரையும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தந்தை பெரியார் அரசியல் கட்சியின் தலைவர் அல்ல; தேசத்தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் காந்தி அடிகளைப் போல, தமிழ்நாட்டிற்கும் திராவிட இனத்திற்கும் தந்தை பெரியார் பொதுவான தலைவர். தங்களுக்குப் பதவி கிடைக்கச் செய்தவர்களுக்கே நன்றி காட்டாத அதிமுக அரசு ஆட்சியாளர்களுக்கு, இந்த வரலாறு எங்கே நினைவிருக்கப் போகிறது? அதனால்தான், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்திய காவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய அனுமதித்திருக்கிறது, காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு.