சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுகவின் 71 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பின்னர் இதுகுறித்து திமுகவின் செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ”பேராசிரியர் நூறாண்டு ஆண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வட சென்னையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்.
7,500 கோடி ரூபாய் செலவில் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஏற்கனவே மாவட்டம் வாரியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இது பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு விழா தொடர்பான தான் ஆலோசனை செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தான் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் தமிழகம் வந்துவிட்டு டெல்லி சென்று மீண்டும் தமிழகம் வந்து சென்றிருக்கக்கூடிய நிலையில் தற்போது அவருடைய பாதுகாப்பு சரியில்லை என்று கூறுகிறார்கள். ஒருவேளை டெல்லியில் உள்ள பிரதமரின் பாதுகாப்பு படையினர் தவறு செய்து விட்டார்கள் என்று கூறினார்களா? என்று தெரியவில்லை.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக சட்ட அமைச்சர், ஆளுநரை சந்தித்து வந்திருக்கிறார். தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்திருக்கிறோம் கேரளாவில் அது இருக்கிறது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்”என தெரிவித்தார்.
இதையும் படிங்க:Online Rummy: சந்தேகம் தீர்ந்ததும் ஒப்புதல்..! ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர் தகவல்!