சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 8 இடங்களில் நேற்று (ஜூலை17) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுப் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடியை, விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை இன்று (ஜூலை18) அதிகாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது. அது மட்டுமல்லாமல், மீண்டும் இன்று மாலை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்கட்சி கூட்டத்திற்கு பெங்களூரு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியை தொலைபேசியில் அழைத்து விசாரணை குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள், அமலாக்கத்துறை விசாரணை குறித்தும், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பொன்முடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமைச்சர் பொன்முடியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “திமுகவுக்கு தொல்லை தரும் வகையில் பாஜக செயல்படுகிறது. 37வது புதிய கட்சியாக அமலாக்கத் துறையை பாஜக சேர்த்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது.