தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா: கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By

Published : Oct 13, 2021, 12:00 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், National Highway Logistics Management Ltd, சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் 'பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா' தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்வானது மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (அக். 12) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாடு தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பது ஆகும்.

தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள திருப்பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப் போகிறது.

இந்தப் பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் இணைக்க வழிவகை செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமைய இருக்கிறது. அதேபோல், உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இதில் இருக்கின்றன.

* ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம்

* சேமிப்புக் கிடங்கு

* குளிர்பதன சேமிப்புக் கிடங்கு

* இயந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல்

* மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

இதன்மூலம், சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில் குறையும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்யத் தொடங்கியிருக்கிறோம்.

சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில், 'மாநில சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை' தயாரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கென, டிட்கோ சார்பில் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது. தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. இந்தப் புதுமையான முயற்சியின் காரணமாக, 10 ஆயிரம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டுவரும் பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, திருப்பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தைத் துரிதப்படுத்தவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், இந்த விரைவுச் சாலையை சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

கோயம்புத்தூர், தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பைத் தரும் என நான் உறுதி அளிக்கிறேன்.

இப்போது அமைய உள்ள பல்முனையப் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில், ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத் தர வேண்டும் என ஒன்றிய அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:நீட் எதிர்ப்பு ஆந்திர முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார் டிகேஎஸ் இளங்கோவன்

ABOUT THE AUTHOR

...view details