சென்னை:திருவள்ளூர் மாவட்டம், மோரை கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் 9 வயது மகள் தான்யா. இவருக்கு மூன்றரை வயதில் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதைய தொடங்கியது.
இந்நிலையில், சிறுமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளங்களின் வாயிலாக உதவி கோரியிருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் சிறுமி தான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து முதல்வர் நேரில் வந்து சந்தித்து தான்யாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.