சென்னை: திருமலை-திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழ்நாட்டு பக்தர்களின் சார்பில், ஹிந்து தர்மார்த்த சமிதி 11 வெண்பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம், சனிக்கிழமையான இன்று (செப்.28) பூக்கடை சென்ன கேசவ கோயிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் தொடங்கியுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் வரும் செப்.18ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது. திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் வழக்கமாக நடத்தி வருகிறது. நவராத்திரி நடைபெறும் சமயங்களில் இந்த பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோண நட்சத்திர தினத்தன்று நிறைவு பெறுகிறது.
இந்த உற்சவத்திற்காக திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் ஏழுமலையானுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை மற்றொன்று சென்னையில் இருந்து வெண்குடை, இந்த இரண்டு நிகழ்வும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் மிக விமர்சியாக நடைபெறும்.
11 வெண்பட்டு குடைகள்: 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் திருமலைக்கு எடுத்துச் செல்லப்படும். திருமலை ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள். வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருடசேவையின்போது திருக்குடைகள் சென்னையில் இருந்து சமர்ப்பிக்கப்படுகின்றன.