தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3ஜி இணைய சேவை அனுமதியால் மாஞ்சோலை மக்கள் மகிழ்ச்சி.. அதிவேக இணைய வசதி மாஞ்சோலைக்கு கிடைக்க தாமதமானது ஏன்?

Manjolai hills 3G connection: ஏழைகளின் ஊட்டியான மாஞ்சோலைக்கு 3ஜி சேவை வழங்க ஆட்சியர் அனுமதியளித்துள்ள நிலையில், அங்குள்ள ஏழை மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 10:50 PM IST

'மாஞ்சோலை' மலைக்கிராமத்திற்கு 3ஜி இணைய சேவை வழங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 'ஏழைகளின் ஊட்டி' என அழைக்கப்படும் 'மாஞ்சோலை' அமைந்துள்ளது. இதனை சுற்றி ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி, கோதையாறு போன்ற மலைக்கிராமங்களும் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உள்பட சுமார் 2,000 பேர் வசிக்கின்றனர். இவர்களின் தொலைத்தொடர்புக்காக பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல், ஜியோ போன்ற பிற தனியார் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு வசதி அங்கு கிடையாது. பிஎஸ்என்எல்லில் 2ஜி சேவை மட்டும் வழங்கப்பட்டது. இதனால், கடந்த கரோனோ காலத்தில் மாஞ்சோலை சுற்றுவட்டார மலைக்கிராம எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. கரோனோ காலத்தில் நெட்வொர்க் கிடைக்கும் இடங்களை தேடித் தேடி பாடம் கற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 2ஜி சேவை அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனோ காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் கல்விக்காக 3ஜி சேவை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் மற்றும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்காற்றுடன் பெய்த மழையினாலும், அரிகொம்பன் யானையின் நடமாட்டத்தாலும் 2ஜி சேவை வழங்கி வந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அதன் வழித்தடங்களும் சேதமடைந்தன. இதனால், இப்பகுதியில் இணையதள சேவை கிடைப்பதில் ஏற்பட்ட பெரும் சவால்களினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, இணையதள சேவையின் வேகத்தை அதிகரிக்க வலியுறுத்தி இப்பகுதியினர் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.13) நடந்த வனத்துறை கூட்டத்தில் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மணிமுத்தாறு பேரூராட்சி கவுன்சிலர்கள் மூன்று பேர் மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை கிடைப்பதற்கான கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை 3ஜி சேவை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகால இந்திய திருநாட்டில் 5ஜி சேவையை பொதுமக்கள் பெரும் வகையிலான வசதியை மத்திய அரசு செய்து வருகிறது.

மலைக்கிராமங்களில் இருக்கும் தங்களுக்கு 3ஜி சேவையை இனியாவது வழங்கு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்த சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. 3ஜி சேவை வழங்க அனுமதித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாஞ்சோலையைச் சேர்ந்த ஸ்டாலின் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'இணையதள சேவையே இல்லாமல் இருந்த நிலையில், 3ஜி சேவைக்கான அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நவீன காலத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையிலான 5ஜி சேவையை, தங்கள் பகுதிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து தந்தால் எங்கள் பகுதி மாணவர்கள் பயன்பெறுவார்கள்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க:காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details