இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “
தொழிலாளர்களின் உரிமைக் குரலுக்கு வெற்றி கிடைத்த வரலாற்றுப் பெருமைமிகு நாள்!
‘‘கடலை அடைப்பதெங்கள் தோள்கள் - மலை
கடுகென நொறுக்குவம் நாங்கள்
சுடலை இருந்த இடம் மறுநாள் - மதிற்
சுவர்கள் எழுப்பும் எங்கள் விரல்கள்
உடலை அசைத்த ஓர் அசைப்பில் - இந்த
உலகம் தாமும் அன்றி உயரும்
மடையைத் திருத்துவதும் நாங்கள் - உயர்
வானை அளப்பதுவும் நாங்கள்’’
என்று முழங்கும் தொழிலாளர்த் தோழர்களின் முழக்கம் புரட்சிக்கவிஞர் கவிதைகள்மூலம் உங்கள் செவிப் பறையைக் கிழிக்கவில்லையா?
அதுமட்டுமா?
‘‘உலகம் இருக்க அதில் எங்கள் - நல்ல
உழைப்பும்மிக இருக்கும் இடையில்
கலகம் என்ன? படை என்ன? - ஒரு
கடவுள் என்ன? மதம் என்ன?
அலையும் வேட்டை நாய் போலே - உள்ள
ஆட்சி என்ன? வெறி என்ன?
வலுவில் யுத்த உலைமூட்டி - எம்மை
வருத்த எண்ணிடுதல் என்ன?’’
என்று தொழிலாளர்த் தோழர்கள் தங்கள் தாழ்நிலைக்குக் காரணங்களைச் சுட்டிக்காட்டிடும் உணர்வை வெளிப்படுத்திட்ட கேள்விக்குக் கிடைத்த விடைதான் ‘மே’நாள்!
நம் நாட்டில்தான், ‘‘பிறவி முதலாளி’’களும், பிறவித் தொழிலாளிகளும் வர்ண தர்ம வடிவில் நிரந்தரமாக நிலை பெற்றுள்ள கொடுமைச் சமுதாயம்!
கல் முதலாளிகளின் பக்திக் கொள்ளையோ கொள்ளை!
இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த இந்தச் சீர்கேட்டினைத் திருத்தி, ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்ற சம வாய்ப்பும், சமத்துவ மாண்பும் மலரும் உண்மைச் சமதர்ம சமுதாயம் உருவாக்கப்பட உறுதியேற்போம் இம்‘மே’நாளில்!
ஜாதி, மத பேதங்களால் சண்டையிடும் இந்த சுரண்டல் சுயநல சமூகக் கொடுமைகளை எதிர்த்த தந்தை பெரியாரின் லட்சியங்களை முன்னெடுத்தால் மட்டும் தொழிலாளி வர்க்கம் மானமும், அறிவும் பெற்று மனித நேயர்களாக என்றும் வாழ வழிகாண முடியும். இம்மே நாளில் அனைவருக்கும் நமது புரட்சி வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.