சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (டிச.08) அதிகாலை 1.30 மணிக்கு இலங்கை செல்லும், ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர், நேபாளம் நாட்டு பாஸ்போர்டில், சென்னையிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்வதற்காக வந்துள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின்னாக பதிலளித்துள்ளார்.
இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். அதோடு அவரை தனி அறையில் வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு மத்திய உளவுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர் திபெத் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இவர் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவரா, இல்லையேல் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவரா என்று விசாரிக்கத் தொடங்கினர். அதோடு அவருடைய செல்போனையும் ஆய்வு செய்து, அவர் யார் யாரிடம் எல்லாம் பேசி இருக்கிறார், யாரிடம் இருந்து எல்லாம் இவருக்கு போன் வந்துள்ளது என்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் குடியுரிமை அதிகாரிகள், திபெத் பயணியைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணையில் தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் கியூபிராஞ்ச் போலீஸ், மத்திய உளவுப் பிரிவான ஐபி, குடியுரிமை அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயணி, திபெத்தில் இருந்து இந்தியாவிற்குள் எப்படி, எப்போது வந்தார், நேபாளம் நாட்டு போலி பாஸ்போர்ட் எங்கு வாங்கினார், இப்போது இலங்கைக்கு எதற்காக செல்கிறார், சென்னையில் எத்தனை நாட்கள் தங்கி இருந்தார், சென்னையில் யாரையாவது சந்தித்துப் பேசினாரா, இவருக்கு தீவிரவாத கும்பலோடு தொடர்பு உள்ளதா அல்லது சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:நாய் வளர்ப்பதால் டிமென்ஷியா அபாயம் குறையுமா? - ஆய்வில் வெளிவந்த தகவல்!