சென்னை:கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏற்கனவே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த பழைய நபர்களை கொடுங்கையூர் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில் நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு ராஜரத்தினம் நகர் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் அதிகளவிலான வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் (26), கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற சின்னப் பாம்பு (24), தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. இதில் ஆல்பர்ட் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.