சென்னை: பெரம்பூரில் பரஸ்பர சகாயநிதி என்ற தனியார் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையைக் கொடுத்து வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக வசந்தி ஈஸ்வரப்பன், சக்தி ஐஸ்வர்யா, ராஜம் கண்ணன் ஆகிய மூவர் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் முதலீடுகளை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை கொடுக்கப்படாமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிதி நிறுவனம் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூரில் உள்ள பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது நிதி நிறுவன அலுவலகத்திலிருந்து ஏராளமான ஆவணங்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுமார் நூறு கோடிக்கு மேல் முதலீட்டாளருக்குத் திருப்பி அளிக்கப்படாமல் மோசடி செய்திருப்பது முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான வசந்தி ஈஸ்வரப்பன், அவரது மகள் சக்தி ஐஸ்வர்யா மற்றும் ராஜம் கண்ணன் ஆகிய மூன்று பெண் இயக்குநர்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் இதய நோய்க்கான ரத்தநாள ஆரோக்கியத்தை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு!