சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்களும் அவரது ரசிகர்களும் கண்ணீருடன் இன்று (டிச.29) அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக நிறுவனத் தலைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயகாந்த், நுரையீரல் அழற்சி மற்றும் கரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, விஜயகாந்த்தின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு, அங்கிருந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்தின் ரசிகர்களும், பொதுமக்களும் கோயம்பேடு பகுதியில் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.29) மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. எனவே, இன்று காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணிவரை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, சென்னை தீவுத்திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.