இந்த கரோனா பேரிடர் காலத்தில், தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு கண்காணிப்பு பணிகள் என காவலர்கள் பரபரப்பாக இருந்தாலும், ரவுடியிசம், குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில், குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரவுடிகளைப் பிடித்து வழக்குப்பதிவு, செய்து பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்ட வந்தா கழுத்த அறுத்துக்குவேன் - கைதிகளின் பலே ’எஸ்கேப் பிளான்’!
சென்னை : வியாசர்பாடி காவல் நிலையத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல் நடித்த மூன்று கைதிகள், காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (மே.29) இரவு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிகள் அஜீத் குமார், அஜய், ஜெகதீஷ்வரன் ஆகியோரை பிடித்து, வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். வாகன சோதனையில் பிடிபட்ட அஜீத் மீது கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் உள்ளன. அஜய் மீது கொலை முயற்சி உள்பட 15 வழக்குகளும், ஜெகதீஷ்வரன் மீது நான்கு வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் இன்று (மே.30) காலை வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்த அஜய், அஜீத், ஜெகதீஷ்வரன் ஆகிய மூவரும் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை ரவுடி அஜய் திடீரென கையால் உடைத்தார். பின்னர் காவல் உதவி ஆய்வாளரிடம் "அருகில் வந்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வவேன்" என மிரட்டியுள்ளார்.
அந்த திடீர் நிகழ்வால் அதிர்ச்சியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு மூவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா, தப்பி ஓடிய மூவரையும் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார். சினிமா பட பாணியில் கைதிகள் காவல்நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு