சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பி.வி நகர் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும், மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், குற்ற சம்பவங்கள் ஈடுபடுவோரை விரைவில் பிடிப்பதற்கும் சமூக செயற்பாட்டாளர்கள் உதவியுடன் காவல் துறையினர் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்ததினர்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பி.வி நகர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து காவலர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து, பதிவான சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர். விசாரணையில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியவர்கள் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(23), பார்த்திபன் (30), பாலமுருகன்(27) என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் தங்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு எளிதில் கைது செய்துவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்து சிசிடிவி கேமராவை உடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள், பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்ததையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.