சென்னை: பட்டினம்பாக்கம் லூப் சாலையில் பிரபல ரவுடியான புளியந்தோப்பை சேர்ந்த ஆற்காடு சுரேஷை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய கடற்கரை பகுதியில் வைத்து ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது?.. முன்விரோதம் காரணமா?.. என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆகஸ்டு 19 ஆம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சந்துரு என்ற சைதாப்பேட்டை சந்துரு, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த யமஹா மணி மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, முன்விரோதம் காரணமாக ஆற்காடு சுரேஷ் கொலை நடந்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் சொகுசு கார் ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பல் வந்து செல்வதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டை வைத்து கார் யாருடையது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் சரண் அடைந்த 3 பேரையும் பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இக்கொலை வழக்கின் பின்னணி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கும், ஆற்காடு சுரேஷுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் முன்பகை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய பொறுப்பில் உள்ள அந்த நபரை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.