சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் 12 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 134 வீடுகள் அமைந்துள்ளது. நேற்றிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12ஆவது மாடியில் உள்ள மின்மாற்றியில் திடீரென தீ ஏற்பட்டு அதிகளவிலான புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைத்து குடியிருப்பு வாசிகளும் வெளியே தீப்பற்றி எரிவதாக நினைத்து, அவர்களது பால்கனியில் நின்று கொண்டு செல்போன் டார்ச் லைட்டை ஆன் செய்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள் என கூச்சலிட்டுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த மக்கள் தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின் பேரில், கீழ்ப்பாக்கம், கிண்டி, விருகம்பாக்கம், அசோக் நகர் ஆகிய நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.