சென்னை, ராயபுரம் வடக்கு மாதா கோயில் தெருவில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மே 23ஆம் தேதி பூட்டை உடைத்து கடையில் இருந்த ஏழு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கபட்டது. இது தொடர்பாக ராயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.
இந்தக் கொள்ளையர்கள் செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்கள் பதுங்கியிருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதன் (எ) லொட்ட மதன் (19), கோபி (எ) கோபிநாத் (19), விஷ்வா (எ) ஸ்கேல் (19) என்பது தெரிய வந்தது. இதில் மதன், கோபி ஆகியோர் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் திருவொற்றியூர், காசிமேடு, மணலி, பட்டாளம், வேப்பேரி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2,60,000 ரூபாய் பணம், விலையுயர்ந்த டிவி, ஹோம் தியேட்டர் போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சென்னையில் வேறு எங்கெல்லாம் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.