சென்னை: கடந்த 19ஆம் தேதி சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் பிரிவில் கொடுத்த புகாரில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும், அதற்குத் தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகளை பற்றி விசாரணை மேற்கொண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை நேற்று (மே 29) கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முகமது புகாரியிடமிருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்டாம்ப் அடிக்கும் இயந்திரம், 2 செல்போன்கள் என மொத்தம் 160க்கும் மேற்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.
பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜெண்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.