சென்னை பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவில் வசிப்பவர் அப்ரோஸ் அகமது(37). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஆர்டிஐ பிரிவில் மாநில செயலாளராக உள்ளார். மேலும் இவர் பெரியமேடு பகுதியில் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு லைட், சாமியான போடும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அப்ரோஸ் கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தாங்கள் சிறைக்கு செல்ல நீ தான் காரணம் என கூறி அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அப்ரோஸ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியமேடு பகுதியில் உள்ள உணவகத்தில் மாமூல் கேட்டு தகராறு செய்து உணவு அருந்த வந்த இளைஞர் ஒருவரை போதை ஆசாமிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி பேசும் பொருளானது. இதில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வந்த அதே கும்பல் கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு பெரியமேடு பகுதியில் கொரியர் நிறுவன ஊழியரை மாமூல் கேட்டு அடித்து உதைத்து, பணத்தை பறித்து சென்றது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பேசும் பொருளானது. இச்சம்பவத்தில் பெரியமேடு போலீசார் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்ட பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த லோடுமேன் கபில் (27), விக்கி என்ற விக்னேஷ் (27) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.