சென்னை:உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் உயிரிழந்த ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அஃப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் என்ஐஏ அலுவலர்கள் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுவரை என்ஐஏ அலுவலர்களால் நடத்தப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தவும், அதன் மூலம் மதப் பிரச்னைக்கு வழிவகுக்கவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டது தெரிய வந்துள்ளது.
அதேபோல் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களும் கெமிக்கல் பொருட்கள் மற்றும் ஐஇடி போன்ற வாகனங்களில் பொருத்தி வெடிக்கச் செய்யும் வகையிலான வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தத் திட்டம் தீட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக என்ஐஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் கோவை கார் விபத்து சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் இருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்தும், பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டும் வந்ததாக சென்னையைச் சேர்ந்த 18 பேர் பட்டியலில் இடம் பெற்றதும் தெரிய வந்தது.