கரோனா ஊரடங்கின் மத்தியில் வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பணப்பற்றாக்குறையில் பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில், வேலை இழந்து தவித்து வந்த சென்னை, வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், ஆன்லைன் மூலமாக வேலை தேடி வந்துள்ளார்.
அப்போது www.Times4job.com என்ற வலைதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்புகள் குறித்து அவர் தேடியதை அடுத்து, அந்த வலைதளத்தில் இருந்து சிவசங்கரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர், மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறும், பிரபல நிறுவனத்தில் தாங்கள் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சிவசங்கரை நம்ப வைத்துள்ளார்.
இதனை அப்படியே நம்பிய சிவசங்கர், ஆன்லைன் மூலமாக அந்த வலைதளக் கணக்கிற்கு மூன்றாயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு நீண்ட நாள்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சிவசங்கர் அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது தாங்கள் வெளிநாட்டில் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாகவும், அதற்கு மேலும் எட்டாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் எனக்கூறியும், தொடர்ந்து சிவசங்கருக்கு உரிய வேலை கிடைத்து விட்டதாகவும் ஆனால் வெளிநாட்டிற்கு செல்ல லட்சக்கணக்கில் செலவாகும் எனக் கூறியும் அவரை நம்ப வைத்து, மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வரை அவரிடம் அந்த வலைதள நபர் பெற்றுள்ளார்.