சென்னை: சாலிகிராமம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன்(60). சித்த மருத்துவரான இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்தார். இவருக்கு சாருமதி (57) என்ற மனைவியும், ஜனப்பிரியா(24) என்ற மகளும் இருந்தனர். சாருமதி நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகவும், ஜனப்பிரியா 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாகச் சித்த மருத்துவ தொழில் நஷ்டத்தில் செல்வதால் கங்காதரன் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று நள்ளிரவும் பிரச்சனை ஏற்படவே, கங்காதரன், மனைவி, மகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இளம்பெண் ஜனப்பிரியா, இவ்விவகாரம் தொடர்பாக ஹேமலதா என்பவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, மூவரும் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளனர். மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கங்காதரன் மற்றும் ஜனப்பிரியா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.