கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ’ரெம்டெசிவிர்’ என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சிலர், அம்மருந்தை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (மே.16) ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளதாக சமூக வளைதளங்களில் பதிவிட்ட ராஜ்குமார், ஆதித்தியன், சையது ஆகிய மூன்று பேரை அடையாறு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பங்களாதேஷ் நாட்டில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்து, அதை கள்ளச்சந்தையில் ஒரு குப்பி 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், கரோனா காலத்தில் உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கான வாட்சப் குழு அமைத்து அந்த குழுவில் மருந்து கேட்டு வருபவர்களிடம் விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் 80 ஆயிரம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க:'இந்தியா முழுவதும் ரயில் மூலம் 8,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சென்றது' - இந்தியன் ரயில்வே